திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டேலா திரைப்படத்தை தடை செய்யக்கோரி முடிதிருத்தும் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மருத்துவர் சமூக நல சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமையில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். அதன் பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மண்டேலா திரைப்படத்தை தடை செய்யக்கோரி மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் 40 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் யோகிபாபு நடிப்பில், இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் வெளியான மண்டேலா திரைப்படம் முடித்திருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.
முடிதிருத்தும் தொழிலாளியை அந்தத் திரைப்படத்தில் கழிப்பறையை சுத்தம் செய்யும்படி கூறுதல் என பல இடங்களில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையில் அந்த திறப்புபடம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் மனவேதனை அடைந்துள்ளோம். எனவே முற்றிலும் மண்டேலா திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். மேலும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.