கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி நகராட்சி தேர்தலில் தி.மு.க பிரமுகரான கந்தசாமி என்பவர் மகள் நர்மதா வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் நகராட்சி ஆணையாளர் தானுமூர்த்தி, தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோரே நேற்று சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். அதில் அவர் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக என்னால் இந்த பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நான் வகிக்கும் நகர மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து என்னை விலக்கிக் கொள்கிறேன் என கூறியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து அவர் பேசியபோது, “கடந்த 10 மாதங்களாக நகராட்சி கவுன்சிலராக பதவி வகித்த நான் தற்போது சொந்த காரணங்களுக்காக இந்த பதவியில் இருந்து விலக கடிதத்தை அளித்துள்ளேன்.
மேலும் வரலாற்று சிறப்புமிக்க நகராட்சியில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்த மக்களுக்கும், அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் படித்துக் கொண்டிருக்கும் போது மக்களுக்காக பணியாற்ற எனக்கு நகராட்சி கவுன்சிலர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட நான். மக்களுக்கு என்னால் முடிந்த வரை பணிகளை செய்வதற்கு வேறு சிறந்த களம் அமையும் எனவும் இது எனக்கான களம் அல்ல எனவும் உணர்ந்து விலகிக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.