பாகிஸ்தான் நாட்டில் லாஹிண்டே பஞ்சாப் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள பகவல்பூர் நகரில் சக் என்ற இடத்தில் வசித்து வருபவர் கங்காராம். இவரது மனைவி குசும் பாய் பண்ணை ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் குசும் பாய், பண்ணை உரிமையாளரான முகமது அக்ரமிடம் சென்று வேலைக்கான கூலியை வாங்கி வருவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். ஆனால், அக்ரம் அவரை கடுமையாக அடித்து விரட்டி விட்டுள்ளார்.
இதன்பின்னர், அடுத்த நாள் காலையில் அக்ரம் மற்றும் அவரது கூட்டாளிகளான 6 பேர் பெண் தொழிலாளியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அதன் பின்னர், வீட்டில் இருந்தவர்களை அடித்து, தாக்கி கயிற்றில் கட்டி போட்டுள்ளனர். இதனை அடுத்து குடும்பத்தினர் முன்னிலையிலேயே குசும் பாயை, அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, காவல்துறையினரிடம் சென்றால் பாயையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு சென்றுள்ளனர்.
இருப்பினும் குசும் பாய் மற்றும் அவரது குடும்பத்தினர் பகவல்பூர் நகர காவல் நிலையத்திற்கு சென்று நேற்று புகார் அளித்துள்ளார். ஆனால், பண்ணை உரிமையாளரான முகமது அக்ரமுக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும் மூத்த காவல் அதிகாரிகள் பலரை அவருக்கு தெரியும் என்றும் கூறி புகாரை பெற்று கொள்ள மறுத்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் இந்து, கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் போன்ற சிறுபான்மை சமூகத்தினருக்கு பாதுகாப்பு வழங்குகின்றோம் என அந்நாட்டு அரசு தொடர்ந்து கூறி வருகின்றன.
இந்த சூழ்நிலையில், பெருவாரியாக உள்ள மக்கள் மற்றும் நிலபிரபுக்களால் சிறுபான்மை இந்து சமூகத்தினர் தொடர் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்கின்றது. இந்த ஆண்டு மார்ச்சில், பூஜா ஓட் என்ற 18 வயது சிறுமி, சிந்த் மாவட்டத்தில் சுக்கூர் என்ற இடத்தில், ரோஹி பகுதியில் கடத்தலை தடுக்க முயற்சித்தபோது, நடுத்தெருவில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்.