கரூர் குளித்தலை மாவட்டம் அரசுதலைமை மருத்துவமனையை காணவில்லை என்று அங்கு ஒட்டப்பட்டிருக்கும் ஒரு போஸ்டரால் சலசலப்பு நிலவியுள்ளது. குளித்தலை மாவட்டத்தின் 2வது பெரிய நகரமாகும் கரூரில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டதற்கு பின் 2வது நிலையிலுள்ள நகர் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தவேண்டும் என்பது விதி. அதனடிப்படையில் குளித்தலை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தியதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்துவிட்டது.
இந்த நிலையில் குளித்தலையிலுள்ள அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை தான் என்ற அறிவிப்பு வெளியாகியதால் அன்று முதல் சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் குழப்பமான சூழ்நிலை நீடிப்பதால், குளித்தலையிலுள்ள அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனை எனில் அதற்கு ஏன் இன்னும் பெயர்பலகை வைக்கவில்லை என்ற ஒரு சர்ச்சையும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் சம்மந்தப்பட்ட நகர்பகுதி முழுவதும் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் “காணவில்லை, தமிழ்நாடு அரசே…! கண்டுபிடித்து கொடு!. குளித்தலை அரசுதலைமை மருத்துவமனையை காணவில்லை. ஆகவே திருடி சென்றவர்களை கண்டுபிடித்து சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு எங்கள் அரசு தலைமை மருத்துவமனையை மக்களிடம் ஒப்படைத்திடு. இப்படிக்கு!.. தேடிக்கொண்டிருப்போர், பொது மக்கள், அரசியல் கட்சிகள், சமூகநல இயக்கங்கள், சமூகஆர்வலர்கள்” எனும் வாசகம் அச்சிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.