மர்ம விலங்கு ஏதோ கடித்ததில் கால்நடைகள் இறந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட் கோவில் தெருவில் மனுவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமான 1 நாய், 3 கோழிகள் அந்தப் பகுதியில் இறந்து கிடப்பதை கண்டு மனுவேல் அதிர்ச்சியடைந்தார். மேலும் அந்த பகுதியில் வசித்து வரும் ராஜதுரைக்கு சொந்தமான 1 நாய், 9 கோழிகள் இறந்து கிடந்தது. இவ்வாறு ஒரே தெருவில் அடுத்தடுத்து கால்நடைகள் இறந்ததால் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் அச்சத்தில்இருக்கின்றனர். எனவே காட்டிலிருந்து வந்த மர்மமான விலங்கு நாய்கள், கோழிகளை கடித்து இருக்கலாம் என்று பொதுமக்கள் கருதுகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த பூதப்பாண்டி வனவர் ரமேஷ், வனக்காப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஆல்வின், வேட்டை தடுப்பு காவலர் சிவா போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதனையடுத்து அவர்கள் கூறியபோது, ஏதோ மர்மான விலங்கு நாய்களையும், கோழிகளையும் கடித்து கொன்று இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் கடித்த விலங்கு சிறுத்தையாக இருந்தால் நாய்களை கொன்று அதே இடத்தில் விட்டு சென்று இருக்காது. எனவே அந்த மர்ம விலங்கை தேடி வருவதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மர்ம விலங்குகள் மீண்டும் ஊருக்குள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் அதனை பிடிப்பதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.