அமெரிக்காவில் ஜோ பைடன் வெற்றிக்கு எதிராக டிரம்ப் பிரசாரக் குழு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. அது ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி அடைந்தார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார். இதனையடுத்து ட்ரம்பின் பிரசார குழு ஜோ பைடன் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.அவ்வகையில் ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் ஒன்றாக உள்ள பென்சில்வேனியாவில் பதிவான தபால் ஓட்டுகள் அனைத்தும் செல்லாதவை என்று அறிவிக்க வேண்டுமென டிரம்ப் பிரசார குழு சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை எனக்கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து மீண்டும் வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு டிரம்ப் பிரசார குழு எடுத்துச் சென்றது. இந்நிலையில் அந்த வழக்கு விசாரணை நேற்று மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வு நடந்தது. அந்த விசாரணையில் நீதிபதிகள், “குற்றத்தை நிரூபிக்க முதலில் குற்றச்சாட்டுகள் தெளிவானதாக இருக்க வேண்டும்.
அதன் பிறகு அதற்கு தேவையான ஆதாரங்கள் இருக்கவேண்டும். ஆனால் இந்த வழக்கில் அந்த இரண்டுமே இல்லை. அதனால் இந்த வழக்கு விசாரணைக்கு தகுதியற்றது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர். இது டிரம்ப் தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இருந்தாலும் இந்த வழக்கை அடுத்த கட்டமாக சுப்ரீம் கோர்ட்டுக்கு எடுத்துச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.