தேனியில் விஷம் கலந்த நீரை குடித்ததால் 16 ஆடுகள் வாயில் நுரை தள்ளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் வீரபாண்டியில் விவசாயியான பாஸ்டின் துரை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் ஆரோக்கியராஜ் என்பவரும் வசித்து வருகிறார். இவர்களிருவரும் ஆடுகளை வளர்த்து அதனை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்லுவது வழக்கம். அந்த வகையில் இருவரும் ஆடுகளை தர்மபுரி அருகே மேய்ச்சலுக்காக விட்டிருந்தனர். இதனையடுத்து ஆடுகள் தாகத்தை தணிப்பதற்காக அங்கிருந்த குட்டையிலிருந்த தண்ணீரை குடித்தது.
அக்குட்டையிலிருந்து தண்ணீரை குடித்த 10 நிமிடத்திலேயே சுமார் 16 ஆடுகள் வாயில் நுரையை தள்ளி பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் குட்டையிலிருந்த தண்ணீரை குடித்த பாஸ்டினும் மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் பாஸ்டின் துரையை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.