உயிரிழந்த தொழிலாளியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அராசூர் கிராமத்தில் கட்டிட தொழிலாளியான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான விநாயகம், மூர்த்தி, ஆகியோருடன் சேர்ந்து அரசூர்-தென்சேர்ந்தமங்கலம் சாலையில் அமைந்துள்ள பாலத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நிலைதடுமாறிய ஏழுமலை பாலத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டார்.
இதில் படுகாயமடைந்த ஏழுமலையை அருகில் இருந்தவர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ஏழுமலையை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஏழுமலை மனைவி ராஜலட்சுமி மற்றும் உறவினர்கள் ஏழுமலையின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி மருத்துவமனை எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வர்யா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து ஏழுமலையில் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். அதன்பின்னர் ஏழுமலையின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.