வடகொரியா தனது பிராந்திய எதிரி நாடான ஜப்பானை அச்சுறுத்தும் விதமாக அவ்வபோது ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது. இதனால் ஜப்பானுக்கும், வடகொரியாவிற்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜப்பான் தனது புதிய பாதுகாப்பு கொள்கையை வெளியிட்டுள்ளது. அந்த “புதிய கொள்கையின் கீழ் வடகொரியா மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான தாக்குதல் திறனை அதிகரிப்பதற்காக ராணுவ செலவினங்களை இரட்டிப்பாக்குவதாக ஜப்பான் உறுதி அளித்துள்ளது”.
இதனையடுத்து ஜப்பானின் புதிய ராணுவ கொள்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள வடகொரியா ஜப்பானுக்கு எதிராக வலுவான ராணுவ நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பற்றி வடகொரிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “மற்ற நாடுகள் மீதான தாக்குதல்களை நடத்துவதற்கு எதிர் தாக்குதல் திறனை மேம்படுத்துவது, தற்காப்புடன் எந்த தொடர்பும் இல்லாதது. மேலும் தனது பேராசையைத் தீர்த்துக் கொள்வதற்காக ஜப்பானின் முட்டாள்தனமான முயற்சி இது.
தற்காப்பு உரிமைகளை நியாயமான முறையில் செயல்படுத்துவது என்ற காரணத்துடன் அதன் ராணுவ படையெடுப்பு திறனை கட்டி எழுப்புவது நியாயப்படுத்தப்படவும், பொறுத்துக்கொள்ளவும் முடியாதது. மேலும் ஜப்பானிய பாதுகாப்புக் கொள்கையினால் எழுந்திருக்கின்ற சிக்கலில் இருந்து வடகொரியாவின் இறையாண்மை மற்றும் தேசிய நலன்களை பாதுகாக்க தைரியமான மற்றும் வலுவான ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.