ரஞ்சி தொடரில் மும்பை அணிக்காக விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 90 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
ஆண்டுதோறும் இந்தியாவில் உள்நாட்டு தொடரான ரஞ்சிக்கோப்பை தொடர் நடைபெற்று வருகின்றது. அதன்படி இந்த ஆண்டும் ரஞ்சிக் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த ரஞ்சிக் கோப்பை தொடர் மிக முக்கியமானது. ஏனென்றால் இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும். எனவே ஒவ்வொரு வீரர்களும் தங்களது திறமையை இந்த தொடரில் வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிக்க முயற்சித்து வருகின்றனர். இதே போல இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த தொடரில் மும்பை அணிக்காக விளையாடுகிறார்.
இன்று பல்வேறு அணிகள் மோதி வரும் நிலையில், மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் இன்று மோதியது. இதில் மும்பை அணிக்காக 3 ஆண்டுகளுக்குப் பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் டெஸ்ட் போட்டி என்று கூட பாராமல் டி20 போல அதிரடியாக விளையாடி 80 பந்துகளில் (15 பவுண்டரி, 1 சிக்ஸ்) 90 ரன்கள் அடித்து சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார். இருப்பினும் 90 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான். இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி ரஹானே தலைமையிலான மும்பை அணியில் துவக்க வீரர்களாக முதல் இன்னிங்சில் பிருத்வி ஷா 19 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 90 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்..
இதையடுத்து ஜெய்ஸ்வால் மற்றும் ரஹானே இருவரும் ஜோடி சேர்ந்து மிகச் சிறப்பாக அடி சதம் விளாசினர். இதில் ஜெய்ஸ்வால் 162 (195) ரன்கள் எடுத்து அவுட்டானார். இதையடுத்து ரஹானே உடன் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் நாள் முடிவில் மும்பை அணி 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 457 ரன்கள் குவித்துள்ளது. ரஹானே 139 ரன்களுடனும், சர்பராஸ் கான் 40 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளனர்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க தீவிர முயற்சியை மேற்கொள்வேன் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ள நிலையில், தற்போது சிறப்பாக விளையாடி வருவதை பார்த்தால் டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பை பிடிக்காமல் போகமாட்டார் என்றே தெரிகிறது.
இந்த 2022 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக ஆடி வரும் சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார். தற்போது டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை சூர்யகுமார் யாதவ் இல்லாமல் இந்திய அணி களம் இறங்காது என்பதே உண்மை. அந்த அளவிற்கு அவரது ஆட்டம் மிக சிறப்பாக இருக்கிறது. சூர்யகுமார் யாதவ் இந்த ஆண்டு மட்டும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 1,164 ரன்கள் குவித்துள்ளார். அதில் 2 சதங்களும், 9 அரை சதங்களும் அடங்கும்.. அது மட்டுமில்லாமல் இந்த ஆண்டு முழுவதுமே 46 ரன்கள் சராசரியுடன் 187 ஸ்ட்ரைக் ரேட்டில் கிரிக்கெட் உலகையே அதிர வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.