தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை அதிகரித்து இருக்கிறது. இது தொடர்பாக தி.மு.க அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில், மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாா். அதிமுக-வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒருநாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு தில்லி வந்தாா். அவா் முன்னாள் அமைச்சா்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் எம்.பி. போன்றோருடன் தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை அவரது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் சந்தித்துப் பேசினாா். அதன்பின் தில்லிபொதிகை தமிழ்நாடு இல்லத்தில் நிரூபர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசினார். அதாவது “அமித்ஷாவை நாங்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.
எனினும் தமிழகத்தின் வளா்ச்சிக்காகவும் நலன்களுக்காகவும் முக்கிய விவகாரங்களை அவரது கவனத்துக்கு கொண்டுசென்றோம். நான் முதலமைச்சராக இருந்த போதே 2 திட்டங்களை நிறைவேற்றக் கோரி பிரதமரை வலியுறுத்தி வந்தேன். தமிழகத்தின் தண்ணீா் தேவையை பூா்த்திசெய்யும் முக்கியத் திட்டம் கோதாவரி – காவிரி இணைப்பு ஆகும். அது தற்போது டிபிஆா் தயாரிப்புப்பணி அளவில் இருப்பதாக அறிகிறேன். இதனை வேகப்படுத்தி திட்டத்தை நிறைவேற்றக் கோரினோம். தமிழகத்தில் இப்போது சட்டஒழுங்கு முற்றிலும் சீரழிந்து இருக்கிறது.
ஏனெனில் எல்லா இடங்களிலும் போதைப் பொருள்களானது தடை இன்றி கிடைக்கிறது. இதனால் மாணவா்கள், இளைஞா்கள் சீரழிந்து வருவது பற்றி அமைச்சா் அமித் ஷாவிடம் எடுத்துக்கூறினோம். இது தொடர்பாக ஏற்கெனவே பல முறை சட்டபேரவையில் தற்போதைய முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். கட்சி ரீதியாகவும் அறிக்கை வெளியிட்டும், அதுபற்றி எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை. அரசின் அலட்சியம் காரணமாக தமிழகம் முழுதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையானது பெருவாரியாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள தவறியதால், மத்திய உள்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்” என்று பேசினார்.