சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே டிராவல்ஸ் அதிபர் கடன் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே சங்கந்திடல் கண்மாய் பகுதியில் வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட் அணிந்திருந்த 52 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கிடந்துள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காரைக்குடி காவல் துறையினருக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தூக்கில் தொங்கிய பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இறந்தவரின் சட்டை பையில் சோதனையின்போது செல்போன் ஒன்று கிடைத்துள்ளது.
அதன்மூலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தற்கொலை செய்து கொண்டவர் கோவை விமான நிலையம் அருகே டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த புகழேந்திரன் என்பது தெரியவந்தது. மேலும் இவர் சில காலங்களாக கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததும் தெரிய வந்தது. அதன் பின் அவர் மன உளைச்சலில் காரைக்குடி வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் அவருடைய குலதெய்வ கோவில் உள்ள இடம் அருகே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் வெளிவந்தது. இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.