குஜராத் மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. திங்கட்கிழமை ஒரேநாளில் 6 ஆயிரத்து 21 பேர் பாதிக்கப்பட்டதுடன் 55 பேர் உயிரிழந்து இருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்தநிலையில் முறையான மருத்துவ வசதிகள் இல்லாததால் மக்கள் வேதனைப்படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அகமதாபாத் மருத்துவமனையில் போதிய படுக்கைகள் இல்லாததால் ஆம்புலன்ஸ்கள் அணிவகுத்து காத்து கிடக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. மூச்சுத்திணறல் காரணமாக அழைத்து செல்லப்பட்ட பெண் பேராசிரியர் ஒருவர் மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் உயிரிழந்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே சூரத் நகரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குகளுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை வெட்ட வெளியில் போட்டு எரிக்கும் வீடியோ வெளியானதை அடுத்து, சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதனிடையே குஜராத் மாநில கொரோனா பாதிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்மாநில உயர் நீதிமன்றம், மாநில அரசு சொல்லும் புள்ளி விவரங்களுக்கும், உண்மை நிலவரத்திற்கு தொடர்பு இல்லை என்றும் கூறியுள்ளது.
உரிய மருந்துகள் மக்களுக்கு கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவங்கள் குஜராத் மாநில பாஜக அரசுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது, பலரும் பாஜக அரசை விமர்சித்து வருகின்றனர்.