முன்பெல்லாம் அனைத்து வீடுகளிலும் உணவுகளை தயார் செய்வதற்காக உரல், உலக்கை, ஆட்டுக்கல், அம்மிக்கல் போன்றவற்றை பெண்கள் பயன்படுத்தி வந்தனர். இதனால் அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தனர். ஆனால் தற்போது விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்து விட்டது. தொழில்நுட்பம் வளர்ந்த காரணத்தினால் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுமே நவீனமயம் ஆகிவிட்டது. அம்மிக்கல், ஆட்டுக்கல், உரல், உலக்கை ஆகியவை போய் தற்போது மிக்ஸி கிரைண்டர் வந்து விட்டது.
இதனால் பழமையான பொருட்கள் அழிந்து போய்விட்டது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள பல கிராமங்களில் வசிக்கும் பழங்குடி பெண்கள் அரசு வழங்கிய இலவச மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை தவிர்த்துவிட்டு பாரம்பரியம் மாறாமல் இன்னும் உரல் உலக்கை பயன்படுத்தி வருகிறார்கள், இதனால் அவர்கள் இன்னும் ஆரோக்கியமாக உள்ளார்கள், இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இவற்றைப் பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மனம் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். அழிந்துவரும் பாரம்பரியமான வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களை பழங்குடியின மக்கள் பாதுகாத்து பயன்படுத்துவது பாராட்டுதற்குரியது.