உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினரின் வேட்புமனு திமுகவினரால் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், கடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அதிமுகவினர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், கடந்த காலத்தில் திமுக ஆட்சியில் இருந்த பொழுது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
அப்பொழுது எத்தனை முறைகேடுகள் நடந்தது? என்பது குறித்து பத்திரிக்கையின் வாயிலாக வந்தது. நீதிமன்றம் வரையிலும் சென்றது. ஆகவே நாம் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் வேட்புமனு தாக்கல் செய்யும் பொழுது நம்முடைய வேட்புமனுவை நிராகரிக்கிறார்கள். நம்முடைய கழகத்தின் சார்பாக, கூட்டணியின் சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் மனுவை ஏதாவது காரணத்தை காட்டி நிராகரிக்கிறார்கள். நம்முடைய வேட்புமனு முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு கொடுக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக கள்ளக்குறிச்சியில் 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களின் வேட்பு மனுவை திட்டமிட்டு நிராகரித்துள்ளார்கள் என்று பேசியுள்ளார்.