அண்மையில் பெய்த மழையால் திருநெல்வேலி நகரம் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு வெனிஸ் நகரம் போல் காணப்பட்டது என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
2022 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது, நெல்லை சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது,கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என அவர் கூறினார். திருநெல்வேலி தொகுதிக்கு கல்லூரி தந்ததற்கு நன்றி எனவும், நீர்நிலைகளில் மதகுகள் இல்லாமல் தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதனை சரிசெய்து தரவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர் அண்மையில் பெய்த பருவமழையின்போது நெல்லை நகரமே மழை,வெள்ளத்தால் சூழப்பட்டு வெனிஸ் நகரம் போல் காட்சியளித்தது எனக்கூறினார். நகரி்ன் சாலைகள் சீரமைப்பு, ஸ்மார்ட் சிட்டி பணிகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். கால்நடை மருத்துவ முகாம்களை உடனடியாக நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் எம் எல் ஏக்கள் அமைச்சர்களாக விருப்ப படுகின்றனர் ஆனால் அவர்கள் களத்தில் இறங்கி பணியாற்றுவதில்லை எனக் கூறினார். மாநகராட்சி,நகராட்சிகளில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதிலாக வேறு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.என். நேரு பேசியபோது, ” மாநகராட்சிகளில் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிப்பது வழக்கமான நடைமுறைதான். நல்ல முறையில் பணியாற்றக்கூடிய அதிகாரிகள் இருக்கிறார்கள்” என்று அமைச்சர் நேரு கூறினார்.