Categories
அரசியல் மாநில செய்திகள்

இது பெரியார் மண்… RSS கட்டுப்பாட்டில் ADMK… பாஜக ஜம்பம் எடுபடாது… கவலைப்பட்ட திருமாவளவன் ..!!

அதிமுக ஒரு திராவிட இயக்கமாகவே நீடித்திருக்க வேண்டும் என்ற கவலையிலிருந்து நாங்கள் விமர்சனம் முன் வைக்கின்றோம் என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திமுகவா ? அ திமுகவா ?  என்று விவாதத்தை மடைமாற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை. ஆர்.எஸ்.எஸ் என்கிற பாசிஸ்டுகளா? அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளா ? என்று தான் இந்த அரசியலை பார்க்க வேண்டியிருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரையில், ஜெயலலிதா அம்மையாருக்கு பிறகு 100 விழுக்காடு ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டுக்கு போய்விட்ட இயக்கம் அதிமுக இயக்கம். அதிமுக சுதந்திரமாக செயல்படக்கூடிய ஒரு அரசியல் கட்சியாக இல்லை.

இது அந்த கட்சியின் மீது நமக்கு எந்த காழ்புணர்ச்சியும் கிடையாது. அந்த அடிப்படையிலே வைக்கின்ற குற்றச்சாட்டு அல்ல. அது ஒரு திராவிட இயக்கமாகவே நீடித்திருக்க வேண்டும் என்ற கவலையிலிருந்து நாங்கள் முன் வைக்கக்கூடிய விமர்சனம். பாஜகவினர் இன்னும் தமிழ்நாட்டை புரிந்து கொள்ளவில்லை, தமிழ்நாட்டை படிக்கவில்லை என்பது தெரிய வருகிறது. அவர்கள் வடநாட்டில் உளறுவது போல் இங்கேயும், உளறலாம் என்று கருதுகிறார்கள்.

அங்கே அண்ட புழுகு, ஆகாச புழுகு எடுபடும். தமிழ்நாட்டில் இது பெரியார் மண்,  இந்த மண்ணில் ஆர்எஸ்எஸ் கும்பலின் பொய் பிரச்சாரங்கள், அவதூறுகள், வதந்திகள் எடுபடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். நட்டா மதுரை எய்ம்ஸ் கல்லூரி பணிகள் 95 விழுக்காடு முடிந்துவிட்டது என்று சொன்னார். எந்த பொருளில் சொன்னார் என தெரியவில்லை. வேலையை தொடங்காத நிலையில் 95 சதவீதம் பணிகள் முடிந்து விட்டது என சொன்னது எந்த பொருளில் என்பது  அதிர்ச்சியாக இருக்கிறது. இது எவ்வளவு பெரிய பொய் பிரச்சாரமாக இருக்க முடியும் என நாம் யூகித்துக் கொள்ளலாம்.

இப்படித்தான் தமிழ்நாட்டு மக்களை அவர்கள் படிக்காதவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் அறியாமையை காட்டுகிறது. இருபதாயிரம் புத்தகங்களை படித்து விட்டேன் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிற நபர்களை எல்லாம்,  தமிழ்நாட்டு தலைவர்களாக போட்டிருக்கிற நட்டாவுக்கு,  தமிழ்நாட்டு தலைவர்களையும் அண்ணாமலை போலவே மதிப்பீடு செய்யக்கூடிய நிலை இருக்கிறது என்று நான் கருதுகிறேன். இது பள்ளி கல்வி, கல்லூரி கல்வியை கடந்து பெரியார் கல்வியைப் பெற்ற மண், இந்த மண். இது சமூக நீதியை பெற்ற மண். இந்த மண்ணில் அவர்கள் ஜம்பம் எடுபடாது,  அவர்கள் கனவு பலிக்காது.

Categories

Tech |