ஆண்டிபட்டியில் 4 கிளைகளை கொண்ட அதிசய தென்னைமரம் வளர்ந்திருப்பதை கண்டு பொதுமக்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே கரட்டுப்பட்டி என்ற பகுதியில் தவ செல்வம் என்ற விவசாயி வசித்து வருகிறார். அதே கிராமத்தில் அவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு ஒன்று இருக்கிறது. அங்கு ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை அவர் வளர்த்து வருகிறார். அதில் ஒரு தென்னை மரம் குறிப்பிட்ட உயரத்திற்கு வளர்ந்து 4 கிளைகளாக பிரிந்துள்ளது. அந்த நான்கு கிளைகளிலும் தேங்காய்கள் காய்த்துள்ளன.
நாம் அனைவரும் அறிந்ததே தென்னை மரங்கள் உயரமாக வளரும், கிளைகள் இருக்காது என்பதே. ஆனால் தவ செல்வம் தோப்பில் நான்கு கிளைகளுடன் வளர்ந்துள்ள தென்னைமரம் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை பொதுமக்கள் அனைவரும் வியப்புடன் பார்க்கின்றனர். அது மட்டுமன்றி அந்த மரத்தை சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அது தற்போது மிக வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.