கொரோனா வைரஸ், உலகின் கடைசி பெருந்தொற்று அல்ல என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
தொற்றுநோய்களைத் தடுக்க உலகம் தயாராக இருப்பதை கண்காணிக்கும், “The Global preparedness monitoring board”, கொரோனா பரவல் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன் தனது ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது. பெருந்தொற்று ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள எந்தவிதத்திலும் தயாராகவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொற்றுநோய்க்கு எதிராகத் தயாராக இருக்கும் சர்வதேச நாள் கூட்டத்தில் இதனைக் குறிப்பிட்டு பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம், மனித குலத்தின் சுகாதாரம், விலங்குகளின் நலன், இந்த பூமியின் நலன் ஆகியவற்றுக்கு இடையே நெருங்கிய தொடர்பு உள்ளதை கொரோனா வைரஸ் உணர்த்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
பெருந்தொற்று ஏற்படும்போது, பணத்தைக் கொண்டு அவற்றை சமாளிக்கிறோமே தவிர, நிரந்தரத் தீர்வு குறித்து யோசிப்பதே இல்லை எனவும், டெட்ரோஸ் அதனோம் வருத்தம் தெரிவித்தார்.