கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில் துறைப்பட்டு அருகில் உள்ள மணலூர் பகுதியில் வடபொன்பரப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அந்த நேரத்தில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவரை போலீசின் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள மேல்பாச்சர் பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் அழகேசன்(33) என்றும், அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து அழகேசனை கைது செய்து போலீசார் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை எங்கு திருடப்பட்டது? யாருடைய மோட்டார் சைக்கிள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.