வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும் இதனை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. விவசாயிகள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மோடி அரசு மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக அறிவித்திருப்பது, விவசாயிகளின் வரலாறு காணாத போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. மோடி அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் மூன்றையும் எதிர்த்து விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டு காலமாக போராடி வருகின்றனர்.
அவர்களை திசை திருப்புவதற்கு மோடி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும் விவசாயிகள் ஏமாந்து போகாமல் போராட்டங்களை நிறுத்தாமல் தொடர்ந்து போராடினார்கள். அதற்கு வெற்றி கிடைத்துவிட்டது என்றாலும், மோடியின் தந்திரத்துக்கு நாம் பலியாகி விடாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மோடி அரசு இந்த சட்டத்தை திரும்பப் பெறுவது விவசாயிகளின் போராட்டங்களுக்கு மதிப்பளித்து அல்ல. சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக போடும் நாடகம். எனவே விவசாயிகள் மோடியின் இந்த நாடகத்தை கண்டு ஏமாந்து விடக்கூடாது.
மூன்று வேளாண் விரோத சட்டங்களை பாஜக ஆளும் மாநில அரசுகள் சட்டமாக்க முடியும். அது போன்ற தந்திரத்தை பாஜக செய்யாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. எனவே நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதன் மூலமாகவே இந்த நாட்டை அந்நிய சக்திகளிடம் இருந்து காப்பாற்ற முடியும். எனவே விவசாயிகளும், ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து பாஜகவை வீழ்த்துவோம்” என்று தெரிவித்துள்ளார் .