கோவை குறிச்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள், காது கேட்கும் கருவி உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்த விழாவில் சுமார் 100 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் கட்சி தொண்டர்கள் மற்றும் பயனாளிகள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதன் பின் சிறப்புரை ஆற்றி பேசிய பா.ஜ.க தலைவர்அண்ணாமலை, “ஆண்டவன் எங்கள் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வைக்கிறார். தேசத்தை இதயத்தில் வைத்து நடக்கும் கட்சி பா.ஜ.க. கடவுளுக்கு மிக நெருக்கத்தில் இருப்பவர்கள் உடலில் சிறு குறைகள் இருந்தாலும் மனதில் எந்த குறையும் இல்லாதவர்களே”.
மேலும் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் பா.ஜ.க-விற்கு பெரிய எழுச்சி கிடைத்துள்ளது. 70 ஆண்டுகளாக தமிழகத்தில் ஊழல் செய்து வருகிறார்கள். ஆனால் டீக்கடையில் எப்போது ரபேல் வாட்ச் விவகாரம் குறித்து பேசுகின்றார்களோ? அப்போது நான் என்னுடைய வாட்ச்சின் பில்லை வெளியிடுகிறேன். ஊழலை பற்றி பேச அருகதை இல்லாதவர்கள் நம் மீது குற்றம் சாட்டுகின்றார்கள். இந்நிலையில் தி.மு.க-வின் ஊழல் குறித்து தெரிவிக்க ஒரு வெப்சைட் அப்ளிகேஷன் தயாராகி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பினாமிகள் குறித்து அதில் தெரிந்து கொள்ளலாம். இந்த அப்ளிகேஷன் மூலமாக பொதுமக்கள் ஒரு புகைப்படம் எடுத்து பதிவு செய்யலாம்.
மேலும் ஊழலை பற்றி பேசுவதற்கு ஒரு தராதரம் வேண்டும். கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் தி.மு.க நமக்கு வாய்ப்பு கொடுத்திருக்காது. தற்போது முதலமைச்சரின் குடும்பத்தை பற்றி பேச யாருக்கும் தைரியம் இல்லை. ஆனால் நமக்கு அந்த தைரியம் இருக்கிறது. தி.மு.க-வினரிடம் உள்ள 2 லட்சம் கோடியா? அல்லது வாட்ச்சின் பில்லா? இப்படித்தான் டீக்கடையில் பேசுவார்கள். இதனையடுத்து பா.ஜ.க சார்பாக பூத் கமிட்டி அமைக்கும் பணி வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்கள் வசித்து வரும் இடத்தில் பூத் கமிட்டி இல்லை என்றால் நீங்கள் அவமானமாக நினைக்க வேண்டும். எல்லாம் சரியாகிவிடும்.
ஏனென்றால் டூ ஆர் டை காலத்தில் நாம் இருக்கிறோம். வருகிற 2024 -ஆம் ஆண்டு தி.மு.க கட்சிக்கு முடிவுரை எழுத முடியும். அதற்கு 25 எம்.பி-க்கள் வாங்கி விட்டால் போதும். அதன் பின் தி.மு.க ஆட்சியில் இருந்தால் என்ன? இல்லை என்றால் என்ன? எத்தகைய சூழ்நிலையையும் உருவாக்கி விடலாம். அதற்கு ரபேல் வாட்சும் உழைக்கும். பா.ஜ.க-வின் வெற்றியை தீர்மானிப்பவர்கள் தொண்டர்கள்தான். அதனால் நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். தொண்டர்கள் கடுமையாக பாடுபட வேண்டும். விரைவில் கோவையில் பொதுக்கூட்டம் நடைபெறும். வருகிற 2024 -ஆம் வருடம் பொள்ளாச்சியில் இருந்து மாற்றம் வரும் என அண்ணாமலை கூறியுள்ளார்.