தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில் ஒரு பகுதியாக தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. கடந்த அதிமுக ஆட்சியில் கடைசி நிதிநிலை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. அதன் பிறகு புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு, எம்எல்ஏக்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்வு, ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை, வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் மற்றும் மானியக் கோரிக்கை மீதான விவாதம் உள்ளிட்ட சட்டப் பேரவைக் கூட்டத் தொடரும் கலைவாணர் அரங்கத்தில் நடந்தது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பாரம்பரியமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத் தொடரை நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது போன்று, காகிதமில்லா சட்டப் பேரவை என்ற அடிப்படையில் புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களுக்கு கணினி பொருத்தும் பணிகளும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.