தமிழகத்தில் பெரு நகரங்களான சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக மிக வேகமான வளர்ச்சிக்கான நகரங்களில் ஒன்றாக மதுரை திகழ்கிறது. இந்த நிலையில் மதுரையின் மக்களவைத் தொகுதி சிபிஎம் கட்சி எம்பி வெங்கடேசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் மதுரையின் அடுத்த கட்ட வளர்ச்சி திட்டங்களான டைடல் பார்க் புதிய தொழில்நுட்ப பூங்கா, வண்டியூர் கண்மாய் புனரமைப்பு திட்டம், மதுரை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து தமிழக முதல்வரின் செயலர்கள் மற்றும் அரசு தொழில் செயலர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்து நேற்று விவாதித்தேன்.
அப்போது திட்ட பணிகளை விரைவில் நிறைவேற்ற வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் மேல் குறிப்பிட்ட திட்டங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மதுரையின் தொழில் வளர்ச்சிக்கு திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாநகராட்சி மற்றும் டைடல் ஆகியவை இணைந்து டைடல் பார்க் போன்றவை அமைக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டது. இது மாட்டுத்தாவணி பகுதியில் இரண்டு கட்டங்களாக அமைக்கப்படும்.
இதன் மூலமாக பத்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைப்போல வண்டியூர் கண்மாயை மெரினா போல மாற்றம் வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதனை சீரமைத்து பொழுதுபோக்கு தளமாக மாற்ற அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது கண்மாயின் கரையில் உள்ள பூங்கா புதுப்பொலிவோடு காட்சியளித்து வருகிறது. அதேபோன்று மதுரை கொட்டாம்பட்டி புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.