மதுரையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கொண்டுவந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த நவீன யுகத்தில் அனைத்து பகுதிகளிலும் சில நபர்கள் மது, கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர். இதோடு மட்டுமல்லாமல் அதனை மற்றவர்களுக்கும் விற்கின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஜெயராமன் மற்றும் வனராஜா என்ற 2 பேர் தங்களது மோட்டார் சைக்கிளில் கஞ்சா வைத்துக்கொண்டு வத்தலக்குண்டு ரோட்டில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சப்-இன்ஸ்பெக்டர் ஜீவா தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் மடக்கி சோதனை செய்ததில் 2 கிலோ கஞ்சா வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இதனால் காவல்துறையினர் அவர்களை கைது செய்ததோடு மட்டுமல்லாமல் அவர்களது மோட்டார் சைக்கிளையும், 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.