தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என உணவு பாதுகாப்புதுறை அதிகாரி ஆணையிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி சௌமியா தலைமையில் ஒரு குழு சோதனையில் ஈடுபட்டுள்ளது. இவர்கள் குளிர்பானம் விற்கும் கடைகள், சாலையோர உணவகங்கள், தேநீர் கடைகள், குடிநீர் விற்பனை செய்யும் கடைகள் போன்றவற்றை ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து தரமற்ற உணவு பொருட்களை தயாரிக்கக்கூடாது எனவும், குளிர்பானங்களில் காலாவதி தேதிகளை சரியான முறையில் குறிப்பிட வேண்டும் எனவும், ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது எனவும் கூறியுள்ளார். அதன் பிறகு கடைக்காரர்கள் நீர் பகுப்பாய்வு சான்றிதழ், குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் வாங்கும் பொழுது அதற்கான விலை ரசீதுகள் போன்றவற்றை கட்டாயம் பெற வேண்டும்.
இதனையடுத்து பொதுமக்கள் உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்களை வாங்கும் போது அதில் காலாவதி தேதி மற்றும் உணவு பாதுகாப்பு துறை லைசன்ஸ் எண் ஆகியவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும். மேலும் சாலையோரங்களில் விற்கப்படும் உணவு பொருட்களை சரியான முறையில் மூடிவைக்க வேண்டும் எனவும், சுத்தமான முறையில் உணவு பொருட்களை பார்சல் செய்து கொடுக்க வேண்டுமெனவும், நெகிழிப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது எனவும் கூறியுள்ளார். மேலும் இந்த விதிகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் எனவும் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி சௌமியா எச்சரித்துள்ளார்.