தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருவதால் அரசு தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் ஆக்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை புறநகரில் கொரோனா தீவிரம் காட்டுவதால் சென்னை மாநகர பேருந்துகளில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து மாநகரப் போக்குவரத்து கழக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி தங்களுடைய கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு சுத்தம் செய்து பாதுகாப்பாக பணி புரிய வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை அனைத்து கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள் தவறாது பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.