மாணவர்கள் படிக்கட்டில் பயணித்தால் ஓட்டுனர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று கூறுவது நியாயமற்ற செயல் என போக்குவரத்து பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஓடும் பேருந்தில் ஏறி இறங்குவது, பேருந்துக்குள் இடமிருந்தும் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வருவது, ஜன்னல் கம்பிகளில் தொங்கிக் கொண்டு வருவது, பின்பகுதியில் உள்ள ஏணியில் ஏறி நின்று செல்வது, மேற்கூரையில் நின்று பயணம் மேற்கொள்வது என பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதை கண்டிக்கும் ஓட்டுநர்கள் நடத்துநர்களிடம் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். நேற்று பள்ளி மாணவர் பேருந்தில் தொங்கியபடி சென்று கீழே தவறி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் படிக்கட்டில் பயணம் செய்தால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது ஓட்டுநர்கள் நடத்துநர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பேருந்தில் இடமிருந்தும் உள்ளே வருவதில்லை. அப்படியிருக்கையில் எங்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று கூறுவது முற்றிலும் நியாயமற்ற செயல் என தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளி முடிவடையும் நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் ஆசிரியர்களை நிறுத்தி பேருந்துகளில் மாணவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும். போலீஸ் சோதனைகளை பேருந்துகள் கடக்கும்போது படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை போலீசார் எச்சரிக்கை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அப்படி செய்தால் மட்டுமே மாணவர்களின்படிக்கட்டு பயணம் குறையும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.