உக்ரைனில் உள்ள மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது சுகாதார அவசர நிலையை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 19 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனின் மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஐ.நா குழந்தைகள் நிதியம், உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐ.நா பொது மக்கள் நிதியத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோல் அதோனம் கூறியதாவது, “இதுவரை உக்ரைனில் ரஷ்யப் படைகள் 31 மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது சுகாதார அவசர நிலையை ஏற்படுத்தும்” என்று கூறியுள்ளார்.