உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 14 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனால் காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் உத்தரவின்படி போக்குவரத்து அலுவலர்களும், போக்குவரத்து போலீசாரும் தாலுகா அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக சாலை, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் ஆகிய பல்வேறு சாலைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஆட்டோ உரிமம் புதுப்பித்தல், இன்ஷூரன்ஸ், வாகன ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கியது தெரியவந்தது. இதனால் 14 ஆட்டோ கலை அதிகாரிகள் பறிமுதல் செய்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களை இயக்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.