சிவகங்கையில் கிராம பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக ஆழ்துளை கிணறுகள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். அதில் அவர் பேசியதாவது, குடிநீர் திட்ட பணிகளுக்கு கிராம பகுதிகளில் சிறப்பு கவனம் எடுத்து தேவையான அளவு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து பொது மக்களுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதையடுத்து பள்ளி கழிப்பறைகள், கூடுதல் வகுப்பறை கட்டிடம், அங்கன்வாடி கட்டிட பணிகள் ஆகிவற்றை கல்வியாண்டு ஆரம்பிப்பதற்கு முன்னதாக முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தி முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.