கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து எடப்பாடி பழனிச்சாமியை அதில் தொடர்புபடுத்தி திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ் பாரதி பேசியது பரபரப்பு ஏற்படுத்தியது. மேலும் இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியின் பினாமி விசாரிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் உண்மைகள் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வார்த்தைகளை அளந்து பேச வேண்டும்.
நீங்கள் ஒரு வார்த்தை பேசினால் நாங்கள் ஆயிரம் வார்த்தைகளை பேசுவோம். வார்த்தைகளை எப்படி உபயோகிக்க வேண்டும்? எந்த நேரத்தில் உபயோகிக்க வேண்டும்? என அனைத்து வித்தைகளும் எங்களுக்கு தெரியும். ஆனால் அரசியல் பண்பாடு எண்ணி நாங்கள் அப்படி பேசவில்லை. அரசியல் ரீதியாக வந்து விமர்சனம் பேசுங்கள். நாங்களும் பதிலடி கொடுக்கிறோம். முதல்வர் ஸ்டாலினை திருப்திப்படுத்தி பதவி வாங்குவதற்கு நாங்கள் தான் கிடைத்தோமா? ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளை பயன்படுத்தி அதிமுகவுக்கும் அண்ணன் எடப்பாடிக்கும் களங்கம் ஏற்படுத்தும் விஷயத்தில் ஈடுபட்டால் தகுந்த பதிலடி கொடுப்போம்.
அடியில் கனமில்லை என்றால் வழியில் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது. கொடநாடு வழக்கு பயன்படுத்தி பூச்சாண்டி காட்ட வேண்டாம். இதுபோல் எத்தனையோ பூச்சாண்டி வேலைகளை எல்லாம் திமுக காலத்தில் அப்போது இருந்தே நாங்கள் பார்த்து பழக்கப்பட்டவர்கள். இதற்கு பயப்படும் கட்சி நாங்கள் அல்ல என்று கூறியுள்ளார்.