அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பத்து மாத காலமாக வீடு கட்டுவதற்கு தேவையான அனைத்து பொருட்களின் விலையும் அதிகமாக உயர்ந்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு உள்ள விலையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மரத்தின் விலை மட்டும் 35 சதவீதம் உயர்ந்துள்ளது.
குழாய்களின் விலை 20 சதவீதம், மின் சாதனங்களின் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளதால் சிக்கனமான பட்ஜெட்டில் வீடு கட்ட நினைப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். வழக்கத்துக்கு மாறான இந்த விலை உயர்வு கட்டுமான தொழிலை முடக்கிப் போட்டுள்ளது. அதற்கு உக்ரைன் போர் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டாலும் மற்ற பொருட்களின் விலை உயர்ந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மக்களுடைய வீடு கட்டும் கனவு நிறைவேற வேண்டுமென்றால் கட்டுமான பொருட்களின் விலையை கட்டுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். எனவே முதல்வர் முக ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு கட்டுமான பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவந்து ஏழை எளிய மக்களின் வீடு கட்டும் செலவை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்…