பெரம்பலூர் அருகே வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாஜலபதி நகரில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணகாந்த் (16) என்ற மகன் இருந்தார். இவர் டிப்ளமோ கெமிக்கல் என்ஜீனியரிங் முதலாமாண்டை தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவரது மகன் வெங்கடேசபிரசாத்தும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் தண்ணீர் பந்தல் அருகே சென்றனர். அப்போது அங்கு வந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
அதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசபிரசாத்தும், கிருஷ்ணகாந்தும் பலத்த காயமடைந்தனர். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பின் அங்கிருந்து அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கிருஷ்ணகாந்த் பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கடேசபிரசாத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பெரம்பலூர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.