திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே விவசாயி ஒருவர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னக்கலையம்புத்தூர் கிழக்குத் தெருவில் சுப்புராயலு என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அந்த கிணறு 60 அடி ஆழம் கொண்டது. அதில் 45 அடி வரை தண்ணீர் இருந்துள்ளது. சுப்புராயலு கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் திடீரென மூழ்கினார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் சுப்புராயலுவை கிணற்றில் இறங்கி தேடினர். ஆனால் சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி காவல்துறையினர் சுப்புராயலுவின் உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.