குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் பாதிக்கபட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ஓட்டேரி பகுதியில் கோவிந்தபுரம், செங்கம் தெரு, வீரராகவன் தெரு, கந்தன் தெரு உள்ளிட்ட உட்பட 16 தெருக்கள் இருக்கின்றன. இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் கலந்த குடிதண்ணிர் வந்துள்ளது.இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனாலும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கோபம் அடைந்த பொதுமக்கள் திடீரென அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த உதவி கமிஷனர் அழகேசன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது பிரச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.