ஆப்கானிஸ்தானில் இருந்து கோதுமை ஏற்றுமதி செய்வதற்கு தலீபான்கள் தடைவிதித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்களின் புதிய அரசை உலக நாடுகள் எதுவும் ஏற்கவில்லை. அதனால் இந்த நாட்டுக்கு சர்வதேச நிதி கிடைப்பது தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கு 2 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக ஐ.நா. கூறுகின்றது.
இதனால் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காக அங்கிருந்து உணவு பொருள் (கோதுமை) ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். மேலும் இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “கோதுமை ஏற்றுமதியை நிறுத்துமாறு நாட்டிலுள்ள அனைத்து சுங்க அலுவலகங்களுக்கும் நிதி மந்திரியான முல்லா ஹிதாயத்துல்லா பத்ரி உத்தரவிட்டுள்ளதாகவும், நாட்டில் கோதுமை தட்டுப்பாட்டைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும்” அவர் கூறியுள்ளார்.