கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவ குழு வட்டார அளவில் அமைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டிருக்கிறது. இதனால் சுகாதாரத் துறையின் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வெளியிடங்களில் சந்தை, கடைகள், மார்க்கெட் என அதிகமாக கூடும் இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முதியோர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவ அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு வட்டார அளவில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கும், அரசின் முறையான வழிகாட்டுதல் முறையை பின்பற்றாத நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தினசரி 20 தடவை சோப்பு போட்டு கைகழுவ வேண்டும். மேலும் தனிமனித இடைவெளியை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். யாருக்கேனும் இருமல், சளி, காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.