சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உரத்தின் விலை உயர்வடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் விவசாயிகள் உரம் விலை அதிகரித்ததால் கவலை அடைந்துள்ளனர். அனைத்து பயிர்களுக்கும் அடியுரமாக பயன்படும் டி.ஏ.பி 1,200 ரூபாயில் இருந்து 1,900 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல் ஒரு மூடை பொட்டாஷ் 500 ரூபாயில் இருந்து 950 ரூபாயாக உயர்ந்துள்ளது. காம்ப்ளக்ஸ் உரங்கள் மூடைக்கு 400 ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும் வியாபாரிகள் யூரியா விலையும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். தற்போது டீசல் விலை உயர்வால் லாரி வாடகை அதிகமானது தான் உரம் விலை உயர்வடைய காரணம். இதனால் வியாபாரிகள் கம்பெனி நிர்ணயித்துள்ள விலையை விட அதிகமான விலைக்கு உர மூடைகளை விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது நெல் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் உரம் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே விவசாயிகள் ஆட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் தவித்து வருகின்றன. இந்நிலையில் உர விலையும் உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் விவசாயத்தை கைவிட்டு விவசாயிகள் வேறு தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்படும். மத்திய அரசு உரங்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மானாமதுரை பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.