தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்து வருகிறார். இந்நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத வியாபாரிகளுக்கு கோயம்பேடு காய்கறிச் சந்தையில் அனுமதி கிடையாது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் கோயம்பேடு சந்தையில் இதுவரை 4000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.