சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முத்துபட்டினம் பகுதியில் குணசேகரன் (48) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அதன் பின் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அங்கு நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிப்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பேர் அவருடைய மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு செல்வதை கண்டார்.
அதன் பின் அவர்களை மடக்கி பிடிக்க முற்பட்டபோது இரண்டு பேரில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அதில் சிக்கிய மற்றொருவனை குணசேகரன் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதில் அவர் காளவாய்பொட்டல் பகுதியில் வசித்து வரும் திருப்பதி என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றொருவனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்