நடிகர் ரஜினிகாந்த் தாதா சாகேப் பால்கே விருதை நான் எதிர்பார்க்கவே இல்லை என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசினால் இந்திய திரையுலகினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது தான் தாதா சாகேப் பால்கே விருது. அமிதாப் பச்சன், லதா மங்கேஷ்கர், சத்யஜித்ரே உள்ளிட்ட பலரும் இந்த விருதினை பெற்றுள்ளனர். மேலும் தமிழ் திரையுலகில் கே.பாலச்சந்தர், சிவாஜி ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 2019-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் கொரோனா பரவல் காரணமாக இந்த விழா நடத்தப்படாமல் இருந்த நிலையில் நாளை (அக்டோபர் 25) டெல்லியில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் 2019-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகளும் வழங்கப்பட இருக்கிறது.
அதன்படி சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த உறுதுணை நடிகர் விருது, அசுரன் படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது, கேடி (எ) கருப்புதுரை படத்திற்காக நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது, ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்காக பார்த்திபனுக்கு சிறப்பு நடுவர் தேர்வு விருது, விஸ்வாசம் படத்திற்காக டி.இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது ஆகியவையும் வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினி இன்று டெல்லி பயணிக்கவுள்ளார். மேலும் தனது இல்லத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய ரஜினி, ‘எனக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த நேரத்தில் கே.பாலச்சந்தர் சார் இல்லையே என வருத்தமாக இருக்கிறது. தாதா சாகேப் பால்கே விருதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த விருது கிடைத்ததில் மகிழ்ச்சி’ என தெரிவித்துள்ளார்.