தொழிலதிபரின் வங்கி கணக்கில் ரூ 2 1/2 லட்சத்தை அபேஸ் செய்தது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம், அம்மாபேட்டையில் வசித்து வருபவர் தொழிலதிபர் கதிரேசன்(53). இவருடைய செல்போன் எண்ணிற்கு கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜில் உங்களது வங்கி கணக்கு என்னுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் இல்லாவிட்டால் உங்கள் வங்கிக் கணக்கை முடக்கிவிடுவோம் என்றும், அதற்கு கீழே உள்ள லிங்கை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதை உண்மை என்று நம்பி கதிரேசன் அந்த மெசேஜில் இருந்த லிங்கை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்ட வங்கி கணக்கு எண், பான் கார்டு எண், செல்போனுக்கு வந்த ரகசிய எண் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து அவரது வங்கி கணக்கில் இருந்து 3 தவணைகளில் ரூ 2, 69,991 எடுக்கப்பட்டுள்ளது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கதிரேசன் இந்த மோசடி குறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.