தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய போது உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களோடு மக்களாக இருங்கள் என்று கேட்டுக்கொண்டார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், “உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அதனை பதவியாக பார்க்காமல் பொறுப்பாக நினைத்து செயல்பட வேண்டும்.
முதல்முறையாக மக்களால் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் நான். மக்களுக்கு நாம் செய்யும் சிறிய நன்மை கூட மிகப்பெரிய பெயரை நமக்கு வாங்கிக் கொடுக்கும். உள்ளாட்சி தேர்தல் எந்தவித முறைகேடும் இல்லாமல் நடந்து முடிந்தது. துணை மேயர்கள், மேயர்கள் அரசுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட வேண்டும். அதேபோல் உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.