சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரும்பச்சேரி கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சுவரொட்டி ஒட்டி தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளனர். இதுகுறித்து இளையான்குடி காவல் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜகுரு புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் அ.தி.மு.க.வை சேர்ந்த செல்லப்பாண்டி, லண்டன் குமார், ராஜசேகரன், சன்னாசி ஆகிய 4 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் தி.மு.க.வை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, முருகன், மகேஷ்குமார், மலைச்சாமி ஆகிய 4 பேர் மீதும் காவல்துறையினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.