தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் தடுப்பூசி போட்டுகொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இவ்வாறு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் சான்றிதழை மக்கள் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடுவது வழக்கமாக உள்ளது. ஆனால் இப்படி இனி யாரும் பதிவிட வேண்டாம் என்று அடையாறு துணை ஆணையர் விக்ரமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இது பெயர், வயது, மற்றும் இருப்பிடத்தை மோசடிகாரர்களுக்கு தகவல் கொடுப்பது போன்று இருக்கிறது என்றும் எச்சரித்துள்ளார்.