அமெரிக்க எம்.பி.க்கள் அந்நாட்டில் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கும் முறையை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் பட்டப்படிப்பு மேற்கொள்ள அதிக ஆர்வம் செலுத்தி வருவதோடு ஏராளமானோர் ஆண்டுதோறும் விசாவுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய மாணவர்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்கா கொரோனா பெருந்தொற்று காரணமாக கடும் கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
அதன்படி எச்.1பி எனப்படும் வெளிநாட்டு பணியாளர்களுக்கான விசாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் இந்திய மாணவர்கள் உட்பட பல நாட்டை சேர்ந்த மாணவர்களும் தற்போது அமெரிக்காவுக்கு விசா விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க எம்.பி.க்கள் அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் சர்வதேச மாணவர்களுக்கு விசா வழங்கும் முறையை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அதேபோல் வெளியுறவு மந்திரி பிளிங்டனக்கு ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டர்கள் குழுவினர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் இந்த கல்வி ஆண்டிற்கான முக்கியமான கட்டத்தில் நாம் இருப்பதால் விரைவில் சர்வதேச மாணவர்களுக்கு விசா வழங்கும் முறையை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.