தமிழகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனையை ஒழிப்பதற்காக ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 எனும் பெயரில் மாநிலம் முழுவதும் கஞ்சா வேட்டை நடத்த டி.ஜி.பி சைலேந்திரபாபு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த போதைப்பொருள் வேட்டையில் மாநிலம் முழுவதும் 1,778 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 2400 கிலோ கஞ்சா மற்றும் 135 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேப்போன்று 4,334 குட்கா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 31.2 டன் குட்கா மற்றும் 72 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் பிரபல கஞ்சா வியாபாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் வங்கி கணக்குகள், நிலம், சொத்துகள் போன்றவைகளும் காவல்துறையினரால் முடக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் வங்கி கணக்குகள் மற்றும் சொத்துகளை முடக்கி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சட்ட விரோதமாக போதை பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களின் சொத்துகள் முடக்கப்படும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.