சீனா மற்றும் இந்தியாவின் எல்லைகளிலிருந்த இரண்டு நாட்டு படைகளும் அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு லடாக்கில் இருக்கும் பாங்கோங் என்ற ஏரியில் தெற்கு, வடகரையில் இருக்கும் சீன மற்றும் இந்திய நாடுகளின் படைகள் புதன்கிழமை முதல் ஒன்றிணைந்து வெளியேறுவதற்கு தொடங்கியுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கர்னல் வு கியான் என்பவர் தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை மற்றும் சீனாவில் அதிகாரப்பூர்வ ஊடகங்களில் வெளியான அறிக்கையில் இந்தியாவின் சார்பில் எந்த கருத்துக்களும் இப்போது வரை வெளியாகவில்லை.
சீனாவிற்கும் இந்தியாவிற்கு இடையேயான தளபதி மட்ட ஒன்பதாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்துக்கள் உண்டானதால் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் பாங்கோங் ஏரியின் வட மற்றும் தென்கரையை விட்டு இரு நாட்டுப் படைகளும் வெளியேறியதாக தெரிவித்திருந்தார். மேலும் கடந்த வருடம் மே மாதத்திலிருந்து கிழக்கில் சீன படைகளுக்கும், இந்தியப் படைகளுக்கும் இடையே பரபரப்பான மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.