இத்தாலியில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இத்தாலி சென்றடைந்தார்.
உலகின் வளரும் நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இதற்காக இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி அழைப்பின் பேரில் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இத்தாலி சென்றடைந்தார். மேலும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் குறித்த உலகத் தலைவர்களின் மாநாடு இங்கிலாந்தில் வரும் 1 மற்றும் 2ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைத்ததை தொடர்ந்து பிரதமர் மோடி இம்மாநாட்டிலும் கலந்து கொள்கிறார்.
இதனைத்தொடர்ந்து ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் நேபாளம், ஜப்பான், இஸ்ரேல் ஆகிய நாடுகளின் புதிய பிரதமர்களை மோடி சந்திக்க உள்ளார். இதற்காக இத்தாலி சென்றடைந்த மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மோடி இத்தாலிய பிரதமர் மரியோ டிராகியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாநாடு நிறைவடைந்தவுடன் பிரதமர் மோடி இங்கிலாந்தில் நடைபெற உள்ள பருவநிலை மாறுபாடு தொடர்பான மாநாட்டிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.